குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்திலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனர். இந்நிலையில், அமிர்தசரஸ் மாவட்டத்திலிருக்கும் நீல்காந்த் பல்நோக்கு மருத்துவமனையில் ஐந்து கரோனா நோயாளிகள் உள்பட ஆறு பேர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய இறந்தவர்களின் உறவினர்கள்,"ஆக்ஸிஜன் பற்றாக்குறையே நோயாளிகள் உயிரிழப்பிற்கு காரணம்" என குற்றஞ்சாட்டினர். உயிரிழந்த நபரின் உறவினர் ஒருவர் கூறுகையில்,'என் சகோதரர் இரண்டு நாட்களுக்கு முன்பு சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் நன்றாகத்தான் இருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக நேற்று(ஏப்.23) ஏற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் எங்கள் கண் முன்னே எங்களைப் பிரிந்துவிட்டார்' என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
முன்னதாக, போதுமான அளவில் ஆக்ஸிஜன் பெறப்படவில்லை என்றும், அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொல்லியும் அரசு அலுவலர்களிடம் மருத்துவமனை அலுவலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நேற்று(ஏப்.23) பேசிய நீல்காந்த் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர், சுகாதாரத்துறையிடம் ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து பலமுறை தெரிவித்தும் எவ்வித ஏற்பாடும் செய்யவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.