நிசாம்பாத் : தெலங்கானா மாநிலம் நிசாம்பாத் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசாந்த். சொத்து விவகாரத்தில் பிரசாந்த் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி பிரசாத் என்பவரை கொலை செய்து டிச்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் உடலை எரித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பிரசாத்தின் வீட்டிற்கு சென்ற பிரசாந்த், அவரது மனைவி சந்தித்து பிரசாந்த் போலீசார் பிடியில் இருப்பதாக கூறி அழைத்துச் சென்று கொலை செய்ததாக சொல்லப்படுகிறது.
பிரசாத் மனைவியின் உடலை பசரா பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றில் பிரசாந்த் வீசியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பிரசாத்தின் சகோதரியை சந்தித்த பிரசாந்த் கணவன் மனைவி இருவரும் போலீசாரின் கட்டுப்பாட்டுல் இருப்பதாக கூறி அழைத்துச் சென்று அவரையும் கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே பிரசாத்தின் இரண்டு குழந்தைகளையும் பிரசாந்த் கொலை செய்து போச்சம்பட் பாலத்தின் கீழ் உள்ள கால்வாயில் வீசியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடைசியாக பிரசாத்தின் மற்றொரு சகோதரியை சந்தித்த பிரசாந்த், அவரையும் கொலை செய்து சதாசிவநகர் பகுதியில் தீ வைத்து எரித்ததாக சொல்லப்படுகிறது.
பாதி எரிந்த நிலையில், கண்டெடுக்கப்பட்ட உடல் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவித்த நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் பிரசாந்தை கைது செய்து உள்ளனர். விசாரணையில் சொத்துக்காக 6 பேரையும் கொலை செய்ததாகவும் முதல் மூன்று பேரை தனியாக சென்று கொன்ற நிலையில், மற்ற மூவரை நண்பர்கள் உதவியுடன் கொலை செய்ததாகவும் பிரசாந்த் கூறியதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
மேலும் பிரசாத்தின் வீட்டிற்காக இந்த கொலைகள் அனைத்தையும் செய்ததாக பிரசாந்த் ஒப்புக் கொண்டதாகவும் மீதமுள்ளவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். சொத்துக்காக ஒரு வார இடைவெளியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் துடிதுடிக்க கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் 45 பேர் இடைநீக்கம்!