டெல்லி: மதுபானக்கடை உரிம ஊழல் தொடர்பான புகாரில், டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ அலுவலர்கள் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மனிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை சிசோடியாவும், அரவிந்த் கெஜ்ரிவாலும் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆம்ஆத்மியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தால், தன் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்துவிடுவதாக பாஜகவினர் பேரம்பேசியதாக மனிஷ் சிசோடியா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "ஆம்ஆத்மியை விட்டுவிட்டு, பாஜகவில் இணையும்படி பாஜகவிலிருந்து எனக்கு செய்தி வந்துள்ளது. அவ்வாறு பாஜகவில் இணைந்தால் என் மீதான சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குகள் அனைத்தும் முடித்துவைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் பாஜகவுக்கு எனது பதில் என்னவென்றால், நான் மகாராணா பிரதாப்பின் வழித்தோன்றல், நான் ராஜ்புத். என் தலையை கொடுக்கக் கூட தயாராக இருக்கிறேன். ஆனால், சதிகாரர்கள் மற்றும் ஊழல்வாதிகளின் முன்பு தலை குனிய மாட்டேன். என் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் பொய்யானவை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லையா மோடிஜி...? மனிஷ் சிசோடியா கேள்வி...!