டெல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கரோனா தடுப்பூசி மருந்தான கோவிஷீல்டு பரிசோதனையினை சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (எஸ்ஐஐ) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இணைந்து மேற்கொண்டன.
சீரம் நிறுவனம் மற்றும் ஐசிஎம்ஆர் ஆகியவை இணைந்து பல்வேறுகட்ட சோதனைகளில் நல்ல முடிவுகளைப் பெற்றது. இதையடுத்து., கோவிஷீல்ட் சீரம் நிறுவனத்தின் புனே ஆய்வகத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மேற்பார்வையின்கீழ் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தடுப்பூசியை தற்போது, முன்களப்பணியாளர்கள், வயது முதிர்ந்தோர், உடல் நலக் குறைபாடு உடையோர், 45 வயதிற்கு மேற்பட்டோர் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சீரம் நிறுவனம் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசிக்கான விலையை இரு மடங்காக உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளில் 600 ரூபாய்க்கும் தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிகிறது.
மே 1ஆம் தேதி முதல் மாநில அரசுகளும், தனியார் மருத்துவமனைகளும் கோவிஷீல்டு மருந்துகளை நேரடியாக கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், தடுப்பூசியின் விலையை உயர்த்தியுள்ளது சீரம் நிறுவனம்.