சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள சட்டப்பேரவை வளாகத்துக்கு முன் கொலை செய்யப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாலாவின் பெற்றோர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாப் மாநில பட்ஜெட் கூட்டத் தொடர் மூன்றாவது நாளாக இன்று (மார்ச் 7) தொடங்கியது. அந்த வேளையில், மறைந்த பாடகர் சித்து மூஸ்வாலாவின் தந்தை பால்கவுர் சிங் மற்றும் தாய் சரண் கவுர் இருவரும் சட்டப் பேரவை வளாகத்துக்கு முன் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது மூஸ்வாலா கொலை வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்ததுடன் கோஷங்கள் எழுப்பினர்.
இவர்கள் உடன் காங்கிரஸ் எம்எல்ஏ பிரதாப் பஜ்வா, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாரிங், எம்எல்ஏ சுக்பால் கைரா ஆகியோரும் உடன் இருந்தனர். குறிப்பாக, பஞ்சாப் ரவுடி கும்பல் தலைவன் கோல்டி பிரார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கும்பல் பணத்தை பெற்றுக்கொண்டு தனது மகனை சுட்டுக் கொன்றதாக மூஸ்வாலாவின் தந்தை பால்கவுர் சிங் குற்றம் சாட்டினார். இந்த வழக்கில் முறையான விசாரணை எடுக்கப்படவில்லை. இந்த விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை வைத்தால், எனக்கும் எனது குடும்பத்துக்கும் கொலை மிரட்டல்கள் வருகின்றன.
நான் நீதிக்காக தொடர்ந்து போராடுவேன். கடந்த 10 மாதங்களில், நீதிக்காக பலமுறை காவல்துறையிடமும் மற்றும் அரசாங்கத்திடமும் சென்றேன். ஆனால், மூஸ்வாலா கொலை வழக்கு மறைக்க முயற்சிகள் எடுக்கப்படுகிறது. எங்களுக்கு விரைவில் நீதி கிடைக்காவிட்டால், சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியே நிரந்தர முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்தார். அதன்பின் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி தர்ணா போராட்டத்தை கலைத்தனர். பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா மிகவும் பிரபலமானாவர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக பரப்புரை செய்ய திட்டமிட்டிருந்தார். சில இடங்களில் பரப்புரையை செய்யவும் தொடங்கினார்.
இதனிடையே கடந்த ஆண்டு மே 29 ஆம் தேதி காரில் சென்று கொண்டிருக்கும் போது, கூலிப்படை கும்பலால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணையில் கனடாவில் பதுங்கியிருக்கும் ரவுடி கோல்டி பிராருக்கும் அவரது நெருங்கிய நண்பர் லாரன்ஸுக்கும் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கோல்டி பிரார் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனிடையே மன்மோகன் சிங், மந்தீப் தூபன் இருவர் கைது செய்யப்பட்டு பஞ்சாப் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், பிப் 26ஆம் தேதி சிறையில் ஏற்பட்ட மோதலில் அவர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், மூஸ்வாலாவின் தந்தை பால்கவுர் சிங் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் தமிழ்நாடு போலீசார் 12 பேர் சிறைபிடிப்பு.. நடந்தது என்ன?