ஸ்ரீநகர்: ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியம் சார்பில் பௌர்ணமி தினமான இன்று (ஜூன் 24) அமர்நாத் புனித குகையில் சுயம்புவாக உருவான பனி லிங்கத்துக்கு பிரதான பூஜை நடத்தப்பட்டது.
முன்னதாக கடந்த 21ஆம் தேதி கோவிட் பரவல் அச்சுறுத்தல் காரணமாக அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டது. இதனை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்தார். அப்போது, அமர்நாத் பனி லிங்கத்துக்கு ஆரத்தி உள்ளிட்ட பூஜைகள் வழக்கம்போல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
அவர் கூறியதுபோல் பௌர்ணமி தினமான இன்று அமர்நாத் பனி லிங்கத்துக்கு பிரதான பூஜைகள் தொடங்கின. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியம் செய்திருந்தது. இதைத் தொடர்ந்து ஆரத்தி பூஜை ஜூன் 28ஆம் தேதி தொடங்குகிறது. அன்றிலிருந்து ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை, காலை 6 மணி முதல் 6.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் 5.30 மணி வரையும் ஆரத்தி உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்படும்.
பக்தர்கள் காலை, மாலை ஆன்லைனில் நேரடியாக தரிசனம் மேற்கொள்ளலாம். இது குறித்து ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் நிதிஷ்வர் குமார் கூறுகையில், “இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் சிவபெருமானின் தரசினம் பக்தர்களுக்கு வலிமையை கொடுக்கும். இந்த கோவிட் நெருக்கடியை சமாளித்து வெற்றி பெறுவோம்” என்றார்.
அமர்நாத் பனிலிங்கம் ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள மலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் கோவிட் பரவல் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : அமர்நாத் யாத்திரை ரத்து!