டெல்லி: டெல்லியில் காதலியை கொடூரமாக கொலை செய்து, 35 துண்டுகளாக வெட்டி வீசிய காதலன் அஃப்தாப் அமீனை கடந்த 12ஆம் தேதி டெல்லி போலீசார் கைது செய்தனர். கூறுபோட்ட உடலை புதிதாக ஃபிரிட்ஜ் வாங்கி அதில் சேமித்து வைத்து, 18 நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சென்று வெவ்வேறு இடங்களில் வீசியது தெரியவந்தது. ஆறு மாதங்களுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான விசாரணையில் அஃப்தாப் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று(நவ.17) அவரை டெல்லி சாக்கெட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். அஃப்தாபிடம் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளதால், அவரது காவலை நீட்டிக்க வேண்டும் என போலீசார் கோரிக்கை வைக்கவுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பு கூறுகையில், "காட்டுப்பகுதியிலிருந்து சில எலும்புத் துண்டுகளையும், அஃப்தாபின் வீட்டிலிருந்து ரத்தம் தோய்ந்த ஆடைகள் உள்ளிட்ட பல தடயங்களையும் கைப்பற்றியுள்ளோம். எலும்புத்துண்டுகள் ஷ்ரத்தாவுடையதா என்பதை அறிய டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மெஹ்ரவுலியில் அஃப்தாபின் வீட்டருகே வசிப்பவர்கள், கடைக்காரர்கள், அவரது நண்பர்கள் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஃபிரிட்ஜ் மற்றும் ஆயுதங்களை விற்பனை செய்த கடைக்காரர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதேநேரம் உடலை வெட்ட பயன்படுத்தப்பட்ட ஆயுதம், ஷ்ரத்தாவின் வெட்டப்பட்ட தலை, அவரது செல்போன் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. டிஎன்ஏ சோதனை முடிவுகள் கிடைக்க சுமார் 15 நாட்கள் ஆகலாம். சிசிடிவி பதிவுகள், கால் ரெக்கார்ட்ஸ், டேட்டிங் ஆப் தகவல்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றவும் முயற்சித்து வருகிறோம்.
விசாரணையின்போது அஃப்தாப் சில விஷயங்களை மாற்றிக் கூறினார். அதனால் அவர் வழக்கை திசை திருப்ப முயற்சிக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. உண்மையை கண்டறிவதற்காக அவருக்கு நார்கோ சோதனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளதால், அவரது காவல் நீட்டிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: காதலியின் உடலை வெட்டும்போது அஃப்தாப் அமீனுக்கு கையில் காயம் ஏற்பட்டதா?