ஷோபியன்: ஜம்மு காஷ்மீர் துல்ரான் மாவட்டத்தின் கிராமப் பகுதிகளில் கூட்டு ராணுவப் படைகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று (அக். 11) தீவிர துப்பாக்கிச்சூடு மோதல் ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, அப்பகுதியில் இன்று (அக். 12) அதிகாலை முதலே தாக்குதல் நீடித்தது. பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பகுதி முழுவதும் சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர் தாக்குதலைத் தொடங்கினர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
முடிந்தது ஷோபியன் என்கவுன்ட்டர்
தாக்குதல் நிறைவுற்ற நிலையில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர். உயிரிழந்த இந்த மூவரும் பெரும் பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் எனப் பாதுகாப்புப் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் கூறுகையில், "கொல்லப்பட்ட மூன்று பேரில், ஒருவர் காந்தர்பாலைச் சேர்ந்த முக்தர் ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர், சமீபத்தில் ஸ்ரீநகரில் ஒரு வியாபாரியை கொலைசெய்து ஷோபியனுக்கு குடிபெயர்ந்திருந்தவர். மேலும், அனைவரிடமிருந்தும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன" எனத் தெரிவித்தார்.