அனந்த்நாக் (ஜம்மு காஷ்மீர்): அமர்நாத் யாத்திரை, கடந்த ஜூலை 1ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. தற்போது, அமர்நாத் யாத்திரை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் நிகழ்ந்த கற்கள் சரிவு சம்பவத்தில் 53 வயது பெண் யாத்ரீகர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம், சனிக்கிழமை (ஜூலை 15ஆம் தேதி) நிகழ்ந்து உள்ளது. உயிரிழந்தவர் லட்சுமி நாராயணனின் மகள் ஊர்மிளா பென் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். சங்கம் டாப் பகுதி மற்றும் கீழ் குகைக்கு இடைப்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்று உள்ளது.
இந்த சம்பவத்தில், ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் மலை மீட்புக் குழுவைச் சேர்ந்தவர்கள், பெண் யாத்ரியை மீட்க முயன்றபோது பலத்த காயமடைந்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரிகளின் கூற்றுப்படி, பெண் யாத்ரீகர் புனித குகையை நோக்கி மலையேற்றம் செய்யும்போது சங்கம் டாப் பகுதி மற்றும் கீழ் குகைக்கு இடைப்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்று உள்ளது.
பெண் யாத்ரி தாக்கப்பட்ட இடம் கடினமான நிலப்பரப்பிற்கு பெயர் பெற்றது. உடனடியாக அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. ஆனால் பலனில்லை. சம்பவத்தில் காயமடைந்த மற்ற இருவரும் ஜம்மு காஷ்மீர் மலை மீட்புக் குழு உறுப்பினர்கள் - முகமது சலேம் மற்றும் முகமது யாசீன் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். பெண் யாத்ரீகரின் மரணம் குறித்து காவல் துறை இயக்குநர் (டிஜிபி) தில்பாக் சிங் இரங்கல் தெரிவித்ததோடு, அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு உள்ளார்.
அமர்நாத் யாத்திரை பணியில் ஈடுபட்டிருந்த மலை மீட்புக் குழு உறுப்பினர்கள் இரண்டு பேரும் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கற்கள் சரிவு நிகழ்விற்குப் பிறகு, துரிதமாக செயல்பட்டவர்களை, டிஜிபி பாராட்டினார். ஜூலை மாதம் தொடங்கிய வருடாந்திர அமர்நாத் யாத்திரையின் ஒரு பகுதியாக சனிக்கிழமை (ஜூலை 15ஆம் தேதி) சுமார் 21,400 யாத்ரீகர்கள் புனித குகையில் பிரார்த்தனை செய்து உள்ளனர்.
சிவபெருமானின் இருப்பிடமான அமர்நாத் குகைக்கான கடினமான யாத்திரையில் பங்கேற்க வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்து உள்ளனர். இந்த ஆண்டு 62 நாட்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை, வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி உடன் நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.