அமெரிக்காவில் சிகாகோ, வாஷிங்டன், பெனிசில்வேனியா, செயின்ட் லூயிஸ், கலிஃபோர்னியா வடக்கு, மற்றும் பல்டிமோர் உள்ளிட்ட மாகாணங்களில் மிகப்பெரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த துப்பாக்கிசூட்டில் மாநில பாதுகாப்புப் படை வீரர் உட்பட 6 பேர் இறந்தனர். 12 பேர் காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இல்லினாய்ஸ் மாகாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். இந்த நிகழ்வில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 23 பேர் காயமடைந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டின் காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை.
இதேபோல் வாஷிங்டன் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இசைத் திருவிழாவில் திடீரென ஒரு அடையாளம் தெரியாத நபர் புகுந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர். பின்னர் இசைத் திருவிழாவில் பங்கேற்ற மக்கள் பீதியில் கலைந்து சென்றனர்.
துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதே போல் பெனிசில்வேனியா மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபர் தனது லாரியை வேகமாக ஓட்டிக்கொண்டு லெவீஸ்டவுன் போலீஸ் முகாமுக்குள் நுழைந்தார். அங்கு அவர் துப்பாக்கியால் சுட்டதில் மாநிலப் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
செயின்ட் லூயிஸ் மாகாணத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் போலீஸ் கஸ்டடியிலிருந்து தப்பி வந்த இளைஞர் ஒருவர் தனது கைத் துப்பாக்கியை வைத்து நடத்திய தாக்குதலில் 17 வயது இளைஞர் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபருக்கு 15 முதல் 19 வயதுக்குள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கலிபோர்னியா வடக்கு மாகாணத்தில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் காயமடைந்தனர். அதில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பால்டிமோர் மாகாணத்தில் நடைபெற்ற மற்றுமொரு துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் படுகாயமடைந்தனர். 17 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்திருப்பதாக பால்டிபோர் போலீசார் கூறினர். அமெரிக்காவில் அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு கடந்த கோவிட் தொற்று காலகட்டங்களில் நடைபெற்ற வன்முறை, கொலைகளின் தொடர்ச்சியாக நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு சில வழக்குகள் இளைஞர்களுக்கு இடையேயான பிரச்னைகள் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்திருக்கலாம் என கார்னகி மெலன் பல்கலைக் கழகத்தின் பொது கொள்கைகள் மற்றும் புள்ளிவிவரங்கள் துறை பேராசிரியர் டேனியல் நகின் கூறினார். மேலும் அமெரிக்காவில் துப்பாக்கிகளின் புழக்கம் அதிகரித்தது காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்ந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Drinking and lower muscle mass: அதீத குடிப்பழக்கத்தின் விபரீத விளைவு!- எச்சரிக்கும் மருத்துவர்கள்