மும்பை: நாட்டில் சுமார் பத்து மாநிலங்களில் தற்போதுவரை பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் இன்று பறவைக் காய்ச்சல் குறித்த கட்டுரை ஒன்று எழுதப்பட்டிருந்தது. அதில் பாஜக அமைச்சர்களையும், மத்திய அரசையும் சீண்டி சில கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்பப் பெற வலியுறுத்தியும் சுமார் 40 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடமிருந்து எதிர்ப்பலைகள் கிளம்பியிருந்த நிலையில், விவசாயிகளின் போராட்டப் பின்னணி குறித்து பாஜக அமைச்சர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தனர்.
பாஜக அமைச்சர்கள் பலரும், விவசாயிகளின் போராட்டத்திற்கு பின்னணியில் பாகிஸ்தானியர்கள், காலிஸ்தானியர்கள், நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் போன்றோர் உள்ளனர் என தெரிவித்தனர். இதற்கு பல்வேறு கட்சியினரும், மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், சாம்னாவின் தலையங்கத்தில், விவசாயப் போராட்டத்தின் பின்னணி போன்று நாட்டில் வேகமாகப் பரவி வரும் பறவைக் காய்ச்சலின் பின்னணியிலும் பாகிஸ்தானியர்களும், காலிஸ்தானியர்களும் உள்ளனரோ எனக் கேள்வி எழுப்பி பாஜகவை சீண்டியுள்ளது.
கிராமப்புற மக்கள் பலர் கோழி, அதிலிருந்து வரும் முட்டை ஆகியவற்றின் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி வருகின்றனர். வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால், முட்டைகளை கொள்முதல் செய்யும் வணிக நிறுவனங்கள் இதுபோன்ற காலங்களில் மக்களுக்கு இழப்பீடுகளும் வழங்காது. இதனால் பாதிக்கப்படுவது சிறு வியாபாரிகளும் மக்களுமே.
இதுபோன்ற பேரிடர் காலங்களில் மக்களின் பொருளாதாரம் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகியதுடன், பெரும் நிறுவனங்கள் பொருள்களை கொள்முதல் செய்ய அஞ்சுவதால் இறைச்சிகளையும் முட்டைகளை உண்ண மக்கள் அச்சம் கொள்கின்றனர். எனவே, இந்த சட்டம் அனைத்து வகையிலும் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் பாதிப்பையே ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டிருந்தது.
இதையும் படிங்க: பறவைக் காய்ச்சல்: இந்தியா மற்றொரு வைரஸ் தாக்குதலாக பார்க்கிறதா?