இரண்டு பொதுத் துறை வங்கிகள், எல்ஐசி ஆகியவற்றின் பங்குகள் தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதேபோல், ரயில்வே துறையின் பங்குகளும் தனியாருக்கு விற்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியானது.
இதற்குப் பதிலளிக்கும்விதமாக மக்களவையில் விளக்கம் அளித்த ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படாது என உறுதிமொழி அளித்தார்.
அமைச்சரின் விளக்கத்தில் சந்தேகம் எழுப்பியுள்ள சிவசேனா, முதலீட்டாளர்களின் வியர்வையில் பொது சொத்துகள் உருவாக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.
இது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில், "நாட்டின் சொத்தாக ரயில்வே திகழ்கிறது என அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அது தனியார்மயமாக்கப்படாது. அதேபோல், எல்ஐசி தனியார்மயமாக்கப்படாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்திருந்தார். இவ்விறு அமைச்சர்களின் உத்திரவாதங்களை நம்பும் அளவுக்கா இப்போது சூழ்நிலை உள்ளது?
கோயல், ஜவடேகர் ஆகியோர் சொல்வதற்கு நேர் எதிர் மாறாக பிரதமர் மோடியும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் செயல்பட்டுவருகின்றனர்.
நாட்டின் முக்கியத் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மட்டும் அல்ல; பொதுத் துறை வங்கிகளும் தனியாருக்கு விற்கப்பட்டுவருகின்றன. மோடியின் ஒரே கொள்கை, பொதுத் துறை நிறுவனங்களை முதலீட்டாளர்களுக்கு விற்பதே ஆகும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.