மும்பை: நாராயண் ரானே நீங்கள் மத்திய அமைச்சராக இருக்கலாம், ஆனால் இது மகாராஷ்டிரா. இதை மறக்க வேண்டாம், ஏனென்றால் நாங்க உங்களது 'அப்பன்'. இதற்கான பொருள் என்ன என்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள்! என்று சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
சஞ்சய் ராவத் சனிக்கிழமையன்று நாராயண் ரானேவை எச்சரித்தார். இது குறித்து அவர், "தாக்கரே (மகாராஷ்டிர முதலமைச்சர்) குடும்பத்தையும், மாநில அரசையும் மிரட்டுவதை மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான நாராயண் ரானே நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.
உங்களுக்கு அப்பன் நாங்க! - சிவசேனா எச்சரிக்கை
சிவசேனா கட்சியின் தலைவர்கள் மகாராஷ்டிர உள் துறை அமைச்சர் திலீப் வால்சே பாட்டீலைச் சந்தித்து ரானேவின் சொந்த மாவட்டமான சிந்துதுர்க்கில் உள்ள கொலை வழக்கை மறுபடியும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளனர் என்றும் சஞ்சய் குறிப்பிட்டார்.
மேலும் அவர், "உங்களுடைய ஜாதகம் எங்கள் கையில் என மத்திய அமைச்சர் நாராயண் ரானே மிரட்டுகிறார், அச்சுறுத்துவதை நிறுத்துங்க. எங்களிடமும் உங்களது ஜாதகம் உள்ளது. நாராயண் ரானே நீங்கள் மத்திய அமைச்சராக இருக்கலாம், ஆனால் இது மகாராஷ்டிரா. இதை மறக்க வேண்டாம், ஏனென்றால் நாங்க உங்கள் 'அப்பன்'. இதற்கான பொருள் என்ன என்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள்" எனக் கூறினார்.
ரத்னகிரி-சிந்துதுர்க் மக்களவை உறுப்பினரும், சிவசேனா செய்தித் தொடர்பாளருமான விநாயக் ராவத், "கொலை, மிரட்டிப் பணம் பறிக்கும் செயலில் யார் ஈடுபடுவர் என ஒட்டுமொத்த மகாராஷ்டிரமுமே அறியும்!" என ரானேவை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
ஏழு அரசியல் கொலைகள் - வழக்குகள் தூசு தட்டப்படும்!
சிவசேனா மீது ஊழல், கொலைக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது கேலிக்கூத்தாகும் எனச் சொன்ன ராவத், அவர் (நாராயண் ரானே) தனது கடந்த காலத்தை மறந்துவிட்டாரா? எனக் கேள்வி எழுப்பினரார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் சிந்துதுர்க் மாவட்டத்தில் 'ஏழு அரசியல் கொலைகள்' நடந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். "இந்த வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு மாநில உள் துறை அமைச்சரிடம் நாங்கள் கேட்போம்" என்று ராவத் கூறினார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான மகா விகாஷ் அகாதி (மகாராஷ்டிர வளர்ச்சி முன்னணி) கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. மாநிலத்தின் உள் துறை அமைச்சராக இருக்கும் வால்சே பாட்டீல் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
இதையும் படிங்க: 'உலகின் விருப்பமான ஸ்டார்ட்அப் ஆக வளர்ந்துவரும் இந்தியா!'