மும்பை: சிவசேனா நிறுவனத் தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுக்க சுகாதார முகாம்கள் மற்றும் இரத்த தான முகாம்கள் நடத்த கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
ஆங்கில நாளேட்டில் கார்ட்டூனிஸ்டாக பணிபுரிந்து பின்னர் சாம்னா என்ற பத்திரிகையை தொடங்கி வலதுசாரி மற்றும் மாநில சிந்தனையில் பயணிக்கும் வகையில் கட்டுக்கோப்பான மாபெரும் தொண்டர் படையை கட்டமைத்தவர் பால சாஹிப் தாக்கரே.
இவர், மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் நினைவாக சிவசேனா என்ற கட்சியை 1966ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி தொடங்கினார். இந்தக் கட்சியின் 55ஆவது ஆண்டு நிறுவனத் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் சிவசேனா நிறுவனத் தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். கடந்த 2 ஆண்டுகளாக கோவிட் பரவல் இருப்பதால், கொண்டாட்டங்கள் கைவிடப்பட்டன.
இந்நிலையில் இந்தாண்டு கரோனா பரவலின்போது மக்களுக்கு உதவும் வகையில் சுகாதார முகாம்கள் மற்றும் இரத்த தான முகாம்கள் நடத்தும்படி கட்சித் தொண்டர்களுக்கு தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில் இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு கட்சியின் தலைவரும், மாநிலத்தின் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் காணொலி வாயிலாக உரையாற்றுகிறார்.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் மகா விகாஸ் அகாதி என்ற கூட்டணி வைத்து சிவசேனா ஆட்சி செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'ராமர் கோயில் கட்ட ரூ.1 கோடி நிதி' - உத்தவ் தாக்கரே அறிவிப்பு