புனே: சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த, அவரது சகோதரர் மகன் அஜித்பவார் அக்கட்சியிலிருந்து விலகி, தனது 8 ஆதரவு எம்எல்ஏக்களுடன் மகாராஷ்ட்ராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசில் இணைந்தார். இதனால், தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. இதையடுத்து, கடந்த ஜூலை 2ஆம் தேதி அஜித்பவார் மகாராஷ்ட்ரா துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இது சரத்பவாருக்கு பின்னடைவாக கருதப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்சியைக் கைப்பற்றும் வேலைகளிலும் அஜித் பவார் ஈடுபட்டார். தாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்றும், தனக்கு 40 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும் அஜித்பவார் கூறியிருந்தார்.
அதன் பிறகு பல முறை அஜித்பவார் சரத் பவாரை சந்தித்தார். சரத் பவாரை தங்கள் பக்கம் இழுக்க அஜித் பவார் மூலம் பாஜக முயற்சி செய்து வருவதாக கூறப்பட்டது. இதனிடையே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக உருவாகியுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் சரத் பவார் இடம் பெற்றுள்ளார். அப்போதும், சரத் பவாரை இழுக்க அஜித்பவார் மூலம் பாஜக பேரம் பேசியதாகவும், அதற்கு சரத் பவார் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 25) மகாராஷ்ட்ராவில் உள்ள பாராமதி நகரில் சரத் பவார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "அஜித்பவார் எங்கள் தலைவர் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் நிச்சயமாக பிளவு இல்லை. கட்சியிலிருந்து பெரிய குழு ஒன்று பிரிந்தால்தான் பிளவு ஏற்படும். தேசியவாத காங்கிரசிலிருந்து ஒரு சிலர் வெளியேறி வேறு ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள், அது அவர்களது ஜனநாயக உரிமை. இதனை எப்படி பிளவு என்று கூற முடியும்?" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு 40 சதவீதம் வரி விதித்துள்ளது. இந்த வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும். ஏற்கனவே வெங்காயத்திற்கு மத்திய அரசு சரியான கொள்முதல் விலை வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் வெங்காய ஏற்றுமதிக்கு வரி விதிப்பதால், விவசாயிகள் வீதிக்கு செல்லும் நிலைதான் ஏற்படும். இது தொடர்பாக மத்திய அமைச்சரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை" என்று கூறினார்.
இதையும் படிங்க: உச்ச நீதிமன்றத்தை நாடுகிறாரா ஜார்க்கண்ட் முதலமைச்சர்? - ED சம்மனுக்கு எதிர்ப்பு!