அயோத்தி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 2024ஆம் ஆண்டுக்குள் ராமர் கோயில் கட்டுமானப்பணிகளை முடித்து, பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த ராமர் கோயிலில் வைப்பதற்காக ராமர் மற்றும் சீதையின் சிலைகள் பிரத்யேகமாக உருவாக்கப்படவுள்ளன. இந்த சிலைகளை செய்ய நேபாளத்திலிருந்து பழமையான சாளக்கிராம கற்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, சுமார் 260 மில்லியன் ஆண்டுகள் பழமையான இரண்டு சாளக்கிராம கற்கள் நேபாளத்தின் கண்டகி நிதியிலிருந்து எடுக்கப்பட்டன. அவை கனரக லாரிகள் மூலம் கடந்த 26ஆம் தேதி நேபாளத்தின் ஜனக்பூரிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டன. பீகார் வழியாக பயணித்த இந்தக் கற்களை வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரவேற்றனர்.
இந்த நிலையில், சாளக்கிராம கற்கள் நேற்று(பிப்.1) அயோத்தி எல்லைக்கு வந்தடைந்தன. அப்போது திரளான ராம பக்தர்கள் சாளக்கிராம கற்களை மலர்த் தூவி வரவேற்றனர். ராம பக்தர்கள் உற்சாகத்துடன் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கத்துடன் பட்டாசு வெடித்து கற்களை வரவேற்றனர். பின், இந்த கற்கள் அயோத்தியில் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அப்போது, இந்த சாளக்கிராம கற்களுக்கு விஷேச பூஜைகள் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: ராமர், சீதை சிலை செய்ய நேபாளத்தில் இருந்து உ.பி.க்கு சாளக்கிராம கற்கள் வருகை!