டெல்லி: வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (மே 10) ஆந்திரா-ஒடிசா இடையேயான கரையை கடக்ககூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, மே 10ஆம் தேதி ஒடிசா, வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
மே 11ஆம் தேதி ஒடிசா, வடக்கு ஆந்திரா, மேற்கு வங்கத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக் கூடும். மே 12ஆம் தேதி ஒடிசா, மேற்கு வங்கத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியா வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திங்கள்கிழமை காலை நிலவரப்படி அசானி புயல் ஆந்திரா-ஒடிசாவை நோக்கி மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
அதன்படி, ஆந்திராவின் விசாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 550 கிமீ தொலைவிலும், ஒடிசாவின் பூரிக்கு தென்-கிழக்கே 680 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. எனவே, மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக் கடலில் மிக உயரமான கடல் அலை நிலவக்கூடும். எனவே அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வங்கக்கடலில் உருவானது 'அசானி' புயல்...எங்கு கரையைக் கடக்கும்?