பொய்பெட்(கம்போடியா): கம்போடிய நாட்டின் பொய்பெட் நகரில், தாய்லாந்து எல்லையை ஒட்டி கிரான்ட் டயமன்ட் சிட்டி நட்சத்திர ஹோட்டல் உள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இந்த ஹோட்டலில் தங்கி உள்ளனர். ஏறத்தாழ 400-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த ஹோட்டலில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஹோட்டலின் சூதாட்ட விடுதியில் நள்ளிரவு வேளையில் புகை மூட்டத்துடன் தீப்பற்றியது. தீ மெல்லப் பரவி ஹோட்டல் முழுவதும் கொளுந்து விட்டு எரியத்தொடங்கியது. மளமளவென பற்றி எரியும் தீ மற்றும் விண்ணை முட்டும் அளவுக்கு வெளியேறிய கரும்புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டும், தீயில் கருகியும் பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர், கட்டடத்தினுள் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஏறத்தாழ 19 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். 30 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாகவும், காணாமல் போன 30 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீயில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து கீழே குதித்து பலர் உயிர் தப்பியதாகவும், மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலர் மயங்கிக் கிடந்ததாகவும் மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்பு மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் அதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட நட்சத்திர விடுதியில் நியூ இயர் பார்ட்டியை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டு இருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தச் சம்பவம் ஆறாத வடுவாக மாறியது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் தம்பதி உள்பட 3 இந்தியர்கள் உயிரிழப்பு