பாலக்காடு: கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்தத் தலைவர் கே. சங்கரநாராயணன் (90). இவர், வயது மூப்பின் காரணமாக நேற்றிரவு (ஏப். 24) அவரது வீட்டில் காலமானார். சங்கர நாராயணன், கேரள மாநில அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். மேலும், 6 மாநிலங்களில் ஆளுநராக பதவி வகித்துள்ளார்.
1932 அக்டோபர் 5 அன்று, பாலக்காட்டில் உள்ள சொர்ணூரில் பிறந்த இவர், மாணவப் பருவத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிவந்துள்ளார். 1977ஆம் ஆண்டு முதன்முறையாக திருத்தாலா தொகுதியில் இருந்து எம்எல்ஏ ஆக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, 1980இல் கிருஷ்ணாபுரம், 1987இல் ஒட்டப்பாளம், 2001இல் பாலக்காடு ஆகிய இடங்களில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார்.
இவர், 1985 - 2001 ஆகிய 15 ஆண்டுகளாக கேரளாவில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (UDF) ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். கேரள முதலமைச்சர்கள் கே. கருணாகரன், ஏ.கே. அந்தோணி ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்துள்ளார்.
இவர் கடைசியாக 2010-14 வரை மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளுநராக பதவி வகித்தார். முன்னதாக, அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், கோவா, நாகலாந்து, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் ஆளுநராக பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.