மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது. இதையொட்டி அம்மாநிலத்தில் பெய்த மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, மும்பை சண்டிவாலி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் கழிவு நீர் செல்லும் கால்வாயில் குப்பைகள் அடைத்து நீர் வெளியேற முடியாமல் இருந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் சிவசேனா சட்டப்பேரவை உறுப்பினரின் கவனத்திற்கு எடுத்துவர, சாக்கடையை சுத்தம் செய்ய ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரரை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவர், முறையாக பதிலளிக்காமலும், சாக்கடையை சுத்தம் செய்ய எந்த முனைப்பையும் காட்டமால் இருந்துள்ளார்.
இந்நிலையில், ஒப்பந்ததாரரை அழைத்துவந்து, தேங்கிய சாக்கடை நீரில் சண்டிவாலி சட்டப்பேரவை உறுப்பினர் உட்கார வைத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
மேலும், கழிவு நீர் செல்லும் குழாய்களில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் மும்பை பெருநகர மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சண்டிவாலி எம்எல்ஏவின் இந்த செயல் சிலரின் பாராட்டைப் பெற்றாலும், இது சரியான செயல் அல்ல என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க: வெடிகுண்டு தயாரித்து காவல்நிலையம் எடுத்துச் சென்ற இளைஞர்!