டெல்லி: தமிழ் திரையுலகில் தனக்கென தனி பாணியைக் கொண்டு, ஸ்டைலாலும், தேர்ந்த கதைகளாலும் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட இவர் ‘கேப்டன் மில்லர்’ படத்தை தற்போது முடித்துள்ள நிலையில் தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்க திட்டமிட்டு உள்ளார். இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இதைத் தொடர்ந்து, தனது 51வது படத்தில், தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவுடன் நடிகர் தனுஷ் கைகோர்க்க உள்ளார். இந்த படத்திற்கு தனுஷ் 51 (D-51) என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து டோலிவுட் கிங் நாகார்ஜூனா நடிக்க இருக்கிறார் என கூறப்பட்டு வந்த நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தி உள்ளது. நடிகர் அக்கினேனி நாகார்ஜுனா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து உள்ளார்.
ராம்கோபால் வர்மாவின் ‘சிவா’, மணிரத்னத்தின் ‘கீதாஞ்சலி’ மற்றும் கே.ராகவேந்திர ராவின் ‘அன்னமையா’ ஆகிய படங்கள் மூலம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த இவர் 90 முதல் தற்போது வரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக இருந்து வருகிறார். இவர் நடிகர் மட்டுமன்றி, திரைப்பட தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தொழில் அதிபர் என ஆல் ரவுண்டர் ஆக இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 37 ஆண்டுகளாக வித்தியாசமான வேடங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் 'கிங்' நர்கார்ஜுனா ஆகஸ்ட் 29ஆம் தேதி தனது 64வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளுக்கு பல்வேறு திரைப்பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
அப்போது தயாரிப்பாளர்கள் சுனில் நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் நாகார்ஜுனாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, D-51 படத்தில் நாகார்ஜுனா, தனுஷுடன் இணைந்து நடிக்கும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டனர். இதையடுத்து முதல் முறையாக ஒன்றிணையும் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா காம்போவுக்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மேலும், படத்தின் தாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாக உள்ளதாகவும், இதுவரை பார்த்திராத புதிய தோற்றத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடன இயக்குனர் விஜய் பின்னி இயக்கத்தில் நாகார்ஜுனா நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் முதல் காட்சி வெளியாகி உள்ளது. ‘நா சாமி ரங்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நாகார்ஜுனா மாஸ் லுக்கில் நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தை அடுத்த ஆண்டு சங்கராந்தி அன்று வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: நடிகர் விஷாலுக்கு "மார்க் ஆண்டனி" படக்குழு கொடுத்த இன்ப அதிர்ச்சி - என்ன தெரியுமா?