கடந்த சில மாதங்களாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், பல்வேறு பிரச்னைகளில் சிக்கி வருகிறார். இவரின் சர்ச்சை கருத்துகளுக்கு பவரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாரிஸ் ஆசிரியர் சாமுவேல் பெடி கொடூரக்கொலை தொடர்பாக கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சமூகவலைதளத்தில் பதிவுசெய்த கருத்துக்கள் அனைத்தும் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக மும்பையில் உள்ள பாந்திரா மாஜிஸ்திரேட் மெட்ரோ பொலிட்டன் நீதிமன்றத்தில் ஷகில் அஷ்ரப் அலி சயத் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, மத ஒற்றுமையை சீர்குலைத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவதாக இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124 ஏ, 153 ஏ, 295 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் கங்கனா ரனாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சந்தல் ஆகிய 2 பேர் மீதும் பாந்திரா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணைக்காக நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி இருவரும் வரும் நவம்பர் 10ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என மும்பை காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னதாக, அக்டோபர் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் மும்பை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு இருவருக்கும் சம்மன் அனுப்பபட்டது. ஆனால், அப்போது சகோதரின் திருமண ஏற்பாடுகள் காரணமாக வர முடியவில்லை என கங்கனா விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆண் நண்பருக்கு எதிராக வழக்கு தொடரும் அமலாபால்...!