பெரோஷ்பூர் (பஞ்சாப்):இன்று(ஜன 5) காலை பதிண்டாவில் இறங்கியப் பிரதமர் மோடி, ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல நேரிட்டது.
மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக 15- 20 நிமிடங்கள் காரணமாக வானிலை சரியாவதற்காகக் காத்திருந்துள்ளார்.
காத்திருப்பிற்குப் பிறகும் வானிலையில் எந்த மாற்றமும் காணப்படாததால் சாலை வழியாகத் தியாகிகள் நினைவகத்திற்குச் செல்லத் திட்டமிட்டார். இந்தப் பயணத்திற்கு ஏறத்தாழ 2 மணி நேரம் ஆகும். பஞ்சாப் காவல் துறையின் டிஜிபியிடம் இருந்து உரிய பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, தன் பயணத்தைத் தொடங்கினார், பிரதமர் மோடி.
15 - 20 நிமிடங்கள் காரில் காத்திருந்த பிரதமர்:
தேசிய தியாகிகள் நினைவகத்திற்கு 30 கி.மீ. முன்பு பிரதமரின் கான்வாய் (பாதுகாப்பு வளையப் பாதை) ஒரு பறக்கும் பாலத்தில் பயணித்துக்கொண்டிருக்கும்போது பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தகவல் கிடைத்தது.
இதனால், அந்தப் பறக்கும் பாலத்தில் பிரதமர் 15 - 20 நிமிடங்கள் வரை காரிலேயே காத்திருக்க நேரிட்டது. மேலும்,மறியல் நீடித்ததால் தன் பயணத்தை ரத்து செய்த பிரதமர்,மீண்டும் பதிண்டாவிற்குத் திரும்பினார்.
இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம், மாநில அரசு இந்த பாதுகாப்புத் தவறுதல் செயல் குறித்து நிச்சயம் விளக்கமளிக்க வேண்டும் என்றும்; பிரதமருக்கு நிகழ்ந்த இந்த பாதுகாப்புத் தவறுதலை நிச்சயம் உள்துறை அமைச்சகம் கவனத்தில் எடுத்து மாநில அரசிடம் விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.