இந்தூர் (மத்தியப் பிரதேசம்): சிராயு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கரோனா நோயாளி ஒருவர், மருத்துவமனை நிர்வாகத்திடம் சிகிச்சைக்கான கட்டணம் செலுத்த தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால், ஊழியர்களுடன் கைகலப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பான காணொலி இணையத்தில் பரவியதை அடுத்து இந்த நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரவி பிரகாஷ் வர்மா என்பவர் மருத்துவமனையில், கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது மகள் ருச்சிகா வர்மா, தனது தந்தைக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைக்கு மருத்துவமனை நிர்வாகம் அதிகப் பணம் கோரியதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “இங்கு அதிகப் பணம் வசூலிக்கின்றனர். இது குறித்து நான் கேள்வியெழுப்பிய போது மருத்துவமனை நிர்வாகத்தினர் எங்களைத் தாக்கினர்.
தந்தைக்கு கொடுக்கப்பட்டிருந்த செயற்கை சுவாசக் கருவியை பிடுங்கி எறிந்தனர். என் தங்கையின் ஆடையைக் கிழித்தனர். மேலும், என் கார் சாவி, நான் வைத்திருந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் பறித்தனர்” என்று அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்துக் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றபோது, அவர்கள் புகாரை ஏற்க மறுத்ததாகத் தெரிவித்த ருச்சிகா, இதுதொடர்பான காணொலியை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். சமூகவலைத்தள வாசிகள் இந்த காணொலியை அதிகம் பகிர, பிரச்னை வெளிசத்துக்கு தற்போது வந்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக இந்தூர் சந்தா நகர் காவல் இணை கண்காணிப்பாளர் பரிஹார் தெரிவிக்கையில், சம்பவம் தொடர்பான காணொலியை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இருதரப்பையும் விசாரணைக்கு உட்படுத்திய பிறகே சரியான விவரங்கள் தெரியவரும் என்று தெரிவித்தார்.