புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த ஆண்டு முதல் கரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த சில மாதங்களாக கரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜுலை 16ஆம் தேதி, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுமென முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர் கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற நமச்சிவாயம், பள்ளி, கல்லூரிகள் திறப்பு தேதி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். இதற்கிடையே புதுச்சேரியில் 10, 11ஆம் வகுப்பு, கல்லூரி முதலாமாண்டு உள்ளிட்டவற்றுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வந்தது.
தடுப்பூசி முகாம் நடத்த திட்டம்
இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு, பராமரிப்பு ஆகியவை குறித்த ஆலோசனைக் கூட்டம், புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் இன்று (ஆக.2) நடைபெற்றது. கல்வியமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சுகாதார செயலர் அருண், கல்வித்துறைச் செயலர் வல்லவன், துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறக்க இன்று (ஆக.2) ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் தொகையில், 6 லட்சம் பேர் தான் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
இதனால் கல்வி, சுகாதாரத் துறையினர் இணைந்து பள்ளி, கல்லூரிகளில் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை
அதில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் தற்போது கண்டிப்பாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது. மேலும் 75 விழுக்காட்டுக்கு மேல் கட்டணம் வசூலிக்கும், கல்வி நிறுவனங்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: தனியார் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு கால நீட்டிப்பு?