சோட்டாடேபூர் (குஜராத்): குஜராத் மாநிலத்தில் சோட்டாடேபூர் (Chhotaudepur) மாவட்டத்தில் உள்ள கோசிந்தரா என்னும் இடத்தில் இருந்து குடியா என்னும் பகுதிக்கு செல்வதற்காக 15 பள்ளி மாணவிகள் பிக்கப் ரக சரக்கு வாகனத்தில் ஏறி உள்ளனர். வேனின் முன்புறம் கேபினில் 3 மாணவிகளும் பின்புறம் 12 மாணவிகளும் ஏறி உள்ளனர்.
பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக அந்த வேனில் ஏறிய மாணவிகளுக்கு, செல்லும் வழியில் அந்த வேனில் இருந்த நபர் பாலியல் ரீதியாக தொல்லை அளித்துள்ளார். இதனால் 6 மாணவிகள் வேனில் இருந்து கீழே குதித்து உள்ளனர். மாணவிகள் கீழே குதித்த நிலையில் வேனின் ஓட்டுநர் குடியா செல்லாமல் லாச்சரஸ் என்னும் பகுதியை நோக்கி வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
மேலும், வேனில் இருந்த் 9 மாணவிகளுக்கும் வேனில் இருந்த நபர்கள் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளனர். மாணவிகள் தொடர்ந்து வேனின் ஓட்டுநரிடம் வண்டியை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் ஓட்டுநர் தொடர்ந்து வேனை வேகமாக ஓட்டிச் சென்ற நிலையில் ஒரு கட்டத்தில் வேன் கவிழ்ந்து விழுந்துள்ளது.
வேன் கவிழ்ந்து விழுந்ததில் அதில் இருந்த 9 மாணவிகள் லேசான காயம் அடைந்து உள்ளனர். பின்னர் மாணவிகள் சிகிச்சைக்காக அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், 6 மாணவிகள் சிகிச்சைக்காக வசவாசி சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
பள்ளி முடிந்து மாணவிகள் வேனில் வீடு திரும்பிய போது பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் குறித்து அறிந்த மாணவிகளின் பெற்றோர் மருதுவமனைக்கு வந்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் நஸ்வாடி போலீசாரிடம், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை விடுத்தனர்.
பள்ளி மாணவிகளுக்கு வேனில் வைத்து பாலியல் தொல்லை அளித்து வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் தலைமைறைவான நிலையில், பள்ளி மாணவிகள் அளித்த புகாரின் பேரில் தொடர்ந்து விசாரித்து வந்த போலீசார் வேன் டிரைவர் அஷ்வின் பிலை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த் இருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்து வசதிக்கு கோரிக்கை: குடியா கிராமத்தில் அரசு பேருந்து வசதி இல்லாதா காரணத்தால் இங்கிருந்து பள்ளி செல்லும் மாணவிகள் பயணம் மேற்கொள்ள தனியார் வாகனங்களை நாட வேண்டிய நிலை உள்ளது. இதனால் கிராமத்தில் அரசு போக்குவரத்து வசதி வழங்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: அஸ்ஸாம் பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு - பிரதமர் நிவாரணம் அறிவிப்பு!