டெல்லி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெரியாற்றின் மீது 1895ஆம் ஆண்டு முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது. இது கட்டப்பட்டு சுமார் 126 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால், முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு, பிரமாண பத்திரம் ஒன்று தாக்கல் செய்தது.
இதற்கு தமிழ்நாடு அரசு, முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாகத்தான் இருப்பதாகவும், நீர்வள பாதுகாப்புத்துறை மற்றும் கட்டட ஆய்வாளர்கள் கூற்றுப்படி முல்லை பெரியாறு அணைக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை எனவும், முல்லை பெரியாறு அணையின் புனரமைப்பு பணிக்கு தமிழ்நாடு அரசை அனுமதிக்க வேண்டும் என்றும் பதில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
கடந்த முறை இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்திற்கு வந்த போது, புனரமைப்பு பணி மேற்கொண்டாலும் முல்லை பெரியாறு அணையை பாதுகாப்பாக மாற்ற முடியாது, அணைக்கென்று சில காலகட்டங்கள் உள்ளன, அதனை முல்லை பெரியாறு அணை தாண்டி விட்டது. ஆகவே முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியில் இருந்து 140 அடியாக குறைக்க வேண்டும் என கேரள அரசு சார்பாக வாதிட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில், இன்று (ஏப் 7) இவ்வழக்கு 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசு தரப்பில், முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட மேற்பார்வை குழுவிற்கு தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு நிகரான அதிகாரத்தை வழங்க வேண்டும், அல்லது மேற்பார்வை குழுவை மாற்றியமைக்க வேண்டும் என வாதிட்டது.
அணை மேற்பார்வை குழுவை கலைக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், தேவைப்பட்டால் இரு மாநிலங்கள் சார்பில் தலா ஒரு அலுவலரை மேற்பார்வை குழுவில் நியமிக்க அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு சம்பந்தமாக கேரள மற்றும் தமிழ்நாடு அரசுகள் முடிவெடுக்கவில்லை எனில், நாளை (ஏப் 8) விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஒருநாள் முன்கூட்டியே நிறைவு