டெல்லி: குஜராத்தை சேரந்த பில்கிஸ் பானு என்ற பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருந்து தண்டனைக் காலம் முடியும் முன்னரே 11 பேர் விடுவிக்கப்பட்டனர். 11 பேரின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.
கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தின் போது பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. ரயிலுக்கு தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறின. இந்த கலவரத்தில் இருந்து பலர் உயிரை தற்காத்து கொள்ள முயன்றனர். அப்படி தப்பிக்க முயன்ற பில்கிஸ் பானு என்ற பெண்ணை குடும்பத்தினரை 11 பேர் கொண்ட கும்பல் கொடுரமாக தாக்கியது.
பில்கிஸ் பானுவின் குடும்பத்தினர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பில்கிஸ் பானுவின் 3 வயது மகள் உள்பட குடும்பத்தில் உள்ள 7 பேர் கோடூரமாக கொல்லப்பட்டனர். மேலும் பில்கிஸ் பானு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக பில்கிஸ் பானு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பில்கிஸ் பானு அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் 11 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையை 11 பேரை குற்றவாளி என அறிவித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2008 ஆம் உத்தரவிட்டது.
ஏறத்தாழ 14 ஆண்டுகள் சிறையில் இருந்த இவர்களை நன்னடத்தை காரணமாக குஜராத் அரசு கடந்த ஆண்டு விடுதலை செய்தது. இந்த விடுதலை சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 11 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மஹூவா மொய்த்ரா உள்ளிட்ட அரசியல் கட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அவசர வழக்காக விசாரிக்கவும், 11 பேர் விடுதலைக்கு எதிரான மனுக்களை விசாரிக்க புதிய அமர்வை அமைப்பதாகவும் பில்கிஸ் பானுவுக்கு கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி உறுதி அளித்தனர்.
பலாத்கார வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 14 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்கள் நன்னடத்தை காரணமாக முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ப்பட்ட வழக்கு இன்னும் இரு நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில், இந்த பலாத்கார வழக்கில் மாநில அரசால் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சைலேஷ் சிம்மன்லால் பாட் என்பவர், அரசு விழாவில் கலந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாஹோட் மாவட்டத்தின் லிம்கேடா தாலுகாவில், கடனா அணையில் இருந்து லிம்கேடா குழும நீர் விநியோகத் திட்டத்தின் கீழ் பைப் லைன் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தாஹோத் எம்.பி. ஜஸ்வந்த்சிங் பாபோர் மற்றும் அவரது சகோதரரும் எம்.எல்.ஏவுமான சைலேஷ் பாபோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த அரசு விழா மேடையில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ ஆகியோருடன் பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு குற்றவாளி சைலேஷ் சிம்மன்லால் பாட் ஒன்றாக அமர்ந்து உள்ளார். எம்.பி. மற்றும் எம்.எல்.ஏவுன் ஒரே மேடையில் அமர்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது.
இந்த புகைப்படத்தை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி உறுப்பினர்கள் பகிர்ந்து பல்வேறு கருத்துகளை பதிவிட்டு இருந்தனர். இந்நிலையில், 11 பேரின் விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே எம் ஜோசப், பி வி நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: Parliament Adjourned: எதிர்க்கட்சிகள் தொடர் அமளி - 3வது வாரமாக முடங்கிய நாடாளுமன்றம்!