டெல்லி: தமிழ்நாட்டில் கோவை, நாகர்கோவில் உள்ளிட்ட 50 இடங்களில் பேரணி நடத்த திட்டமிட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினர், காவல்துறையிடம் அனுமதி கோரினர். காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணி நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை போலீசார் அமல்படுத்தவில்லை எனக்கூறி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானங்களில் பேரணியை நடத்த அனுமதித்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, ஆர்எஸ்எஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆர்எஸ்எஸ் பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது.
மேலும், திறந்த வெளியில் பேரணி நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீண்டும் விண்ணப்பிக்கலாம், அதற்கு போலீசார் அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. கட்டுப்பாடுகளுடன் பேரணிக்கு அனுமதி வழங்கலாம் என்றும், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஒழுக்கத்தை கடைபிடித்து அமைதியான முறையில் பேரணி நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தது. கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பதற்றமான 6 இடங்களைத் தவிர, 44 இடங்களில் பேரணி நடத்தலாம் என்றும் உத்தரவிட்டது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான தங்களது மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று(மார்ச்.1) கோரிக்கை வைக்கப்பட்டது. வரும் 5ஆம் தேதி முதல் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், வழக்கை வரும் 3ஆம் தேதியே விசாரிக்க வேண்டும் என கோரப்பட்டது. அதை ஏற்ற உச்சநீதிமன்றம், ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வரும் 3ஆம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவித்தது.
இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸ் பேரணி அனுமதியை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!