டெல்லி: ஒன்றிய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களையும் திரும்பப் பெறக்கோரி, டெல்லியின் காஜிப்பூர், சிங்கு, திக்ரி ஆகிய நகர்ப்புற எல்லைகளைச் சுற்றிலும் கூடாரம் அமைத்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.
விவசாயிகளுடன் ஒன்றிய அரசு 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும், மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களையும் திரும்பப் பெற்றே தீர வேண்டும், வேறு எந்தத் தீர்வையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என விவசாயிகள் கூறி விட்டனர்.
டெல்லியை முடக்கிய விவசாயிகள்
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நின்று போனது. இதனையடுத்து விவசாயிகள் சங்கம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜந்தர்மந்தரில் அமைதியான முறையில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்த அனுமதி தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கான்வில்கர், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் தலைமையிலான அமர்வு இன்று (அக்.1) விசாரித்தது.
அப்போது விவசாயிகள் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தினைக் கேட்ட பின்னர் நீதிபதிகள் பேசுகையில், 'டெல்லி நகரையே கழுத்தை நெரிப்பதுபோல், நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் முடக்கி வைத்திருக்கிறீர்கள்.
வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு
நெடுஞ்சாலைகளை மறியல் என்ற பெயரில் முடக்குகிறீர்கள். நகரின் மையப் பகுதியில் போராட்டம் நடத்தினால், பொதுமக்களுக்கு மிகப்பெரிய இடையூறுகள் ஏற்படும். எப்படி உங்களுக்கு அனுமதி தர முடியும்?' என கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இதுகுறித்தான வழக்கு விசாரணையை வருகின்ற நான்காம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தாய்ப்பால் புகட்டுவது தாயின் அடிப்படை உரிமை - வித்தியாசமான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு