புது டெல்லி: மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனான ஆஷிஷ் மிஸ்ராவின் பிணையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நபர் ஒரு வார காலத்துக்குள் சரண் அடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்திய சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி நாடு முழுக்க பல்வேறு இடங்களில் விவசாயிகள் கடந்தாண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்த நிலையில் 2021ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி, உத்தரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ள லக்கிம்பூர்கேரி சென்றார்.
அப்போது மற்றொரு காரில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவும் சென்றார். அங்கு விவசாய போராட்டம் நடைபெற்றுகொண்டிருந்தது. அப்போது மத்திய அமைச்சர் மகனின் காரை பார்த்ததும் விவசாயிகள் காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டது.
இந்தப் படுகொலையில் 4 விவசாயிகள் காரின் சக்கரத்துக்குள் நசுங்கி உயிரிழந்தனர். தொடர்ந்து ஆத்திரம் அடைந்த விவசாயிகள் மற்றொரு காரை தீயிட்டு கொளுத்தியதுடன், பாஜக தொண்டர்கள் இருவரையும், காரின் டிரைவரையும் அடித்து கொன்றனர் என முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தச் சம்பவத்தின்போது பத்திரிகையாளர் ஒருவரும் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் பிணை (ஜாமின்) வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு ஏப்.4ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, உத்தரப் பிரதேச மாநில அரசின் தரப்பில் ஆஜரான மகேஷ் ஜெத்மலானி, “குற்றஞ்சாட்டப்பட்டவர் வெளிநாடு செல்லும் அபாயம் இல்லை. மேலும் ஒருவர் குண்டடிப்பட்டு இறந்துள்ளார், இது உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என வாதிட்டார். விவசாயிகள் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் துஷ்யந்த் துவே மற்றும் பிரசாந்த் பூஷண் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
அப்போது அவர்கள், “அலகாபாத் உயர் நீதிமன்றம் விரிவான குற்ற பத்திரிகையை படிக்கவில்லை, மாறாக ஒருவரின் உடற்கூராய்வு அறிக்கையை நம்பி பிணை வழங்கியுள்ளது” என்றனர். மேலும், “ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட பிணையையும் ரத்து செய்ய வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து தீர்ப்பை நீதிபதி ஏப்.18ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இந்த வழக்கில் இன்று (திங்கள்கிழமை) காலை தீர்ப்பளித்த சிறப்பு அமர்வு நீதிபதிகள் சூர்ய காந்த், ஹீமா கோலி ஆகியோர், ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அளிக்கப்பட்டிருந்த பிணையை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், ஆஷிஷ் மிஸ்ரா ஒருவார காலத்துக்குள் சரண் அடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க : ஜஹாங்கீர்புரி வன்முறை; 14 பேர் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்!