ஆதார் அட்டையுடன் இணைக்காத மூன்று கோடி ரேஷன் கார்டுகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்து கொண்டது.
ஆதார் அட்டை தொடர்பான வழக்கு என்பதால் தீவிரமாக எடுத்து கொள்வதாகவும் மத்திய அரசு இதுகுறித்து நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ரேஷன் கார்டுகளை ரத்து செய்வதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.
நீதிமன்றத்தில் மனுதாரர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ், மூன்று கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படுவதும் பட்டினி உயிரிழப்புமே இந்த விவகாரத்தில் முக்கிய பிரச்சினை எனத் தெரிவித்தார்.
இது குறித்து நீதிமன்றத்தில் மத்திய அரசு, "இது குறித்து முன்னரே விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது. ஆதார் கார்டு இல்லாத பட்சத்தில் மற்ற ஆவணங்களை சமர்பிக்கலாம். ரேஷன் மறுக்கப்படாது. இப்பிரச்சினை மாநிலப் பட்டியலில் உள்ளது" எனத் தெரிவித்துள்ளது.