டெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சனைகள் மற்றும் துயரங்கள் தொடர்பான வழக்குகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் பி.வி. நாகரதா ஆகியோரது அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டுவருகிறது. இந்த விசாரணையில் இன்று (ஜூலை 21) நீதிபதிகள், நாடு முழுவதும் பெரும்பாலான புலம்பெயர்ந்தோருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு ரேஷன் கார்டுகளை வழங்கி உணவு பொருள்கள் வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல நாடு முழுவதும் 27 கோடி ரேஷன் கார்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், 15 கோடி கார்டுகளுக்கு மட்டுமே முழுமையாக ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகின்றன. மீதமுள்ள 12 கோடி கார்டுகளுக்கு முழுவதும் வழங்கப்படுவதில்லை. இதனை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது. நமது நாட்டில் எல்லா வளர்ச்சிகளும் இருந்தும் குடிமக்கள் பசியால் இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
கிராமங்களில் மக்கள் பசியால் வயிற்றில் துணியை கட்டிக்கொள்கிறார்கள். இனி நாட்டில் குடிமக்கள் யாரும் பசியால் சாகக்கூடாது. மத்திய, மாநில அரசுகள் புலம்பெயர்ந்தோருக்காகவும், சாமானியர்களுக்காகவும், ஏழைகளுக்காகவும், தேவைப்படுபவர்களுக்காகவும் உழைக்க வேண்டும். தன்னையும் தனது குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள அரசு இருக்கிறது என்று நம்பிக்கை அவர்களுக்கு அளிக்க வேண்டும்.
நமது தேசத்தை கட்டியெழுப்புவதில் சாமானியர்கள் முக்கிய பங்கு வகிப்பதை யாராலும் மறுக்கவே முடியாது. ஆகவே மத்திய அரசு நான்கு வாரங்களுக்குள் புலம்பெயர்தோரின் தரவுகள் குறித்து நடவடிக்கையை தொடங்க வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: நீதிமன்ற உத்தரவை மீறி பெற்றோர் இல்லாமல் மறு உடற்கூராய்வு; உயர் நீதிமன்றத்தில் மாணவி தந்தை தரப்பு வாதம்