டெல்லி: ரவுடி, கட்டப் பஞ்சாயத்து என சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு பின்னர் அரசியல்வாதியாக மாறியவர் முக்தார் அன்சாரி. இவர் மீது பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இவர் பஞ்சாப்பில் உள்ள ரூப்நகர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அங்கிருந்தப்படி தனது கிரிமினல் நெட்வொர்கை தொடர்ந்து இயக்கி வந்துள்ளார். இது குறித்து உத்தரப் பிரதேச அரசு மார்ச் 3ஆம் தேதி பஞ்சாப் அரசிடம் புகார் அளித்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அன்சாரியை, உத்தரப் பிரதேச சிறைக்கு அனுப்ப இன்று (மார்ச் 25) உத்தரவிட்டது. இதனால் அவர் விரைவில் பஞ்சாப் சிறையிலிருந்து உத்தரப் பிரதேசத்திற்கு மாற்றப்படவுள்ளார்.
முக்தார் அன்சாரி உள்ளூர் மக்களால் அறியப்படும் கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர். இந்நிலையில், 1980களில் ரவுடியிசம், கட்டப் பஞ்சாயத்து என்னும் இருட்டு உலகத்துக்குள் தாதாவாக காலடி எடுத்துவைத்தார். அதன்பின்னர் அவர் மீது கொலை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் பதியப்பட்டன. இந்நிலையில் திடீரென அரசியலுக்குள் புகுந்து மா தொகுதியின் எம்எல்ஏ ஆனார்.
முக்தார் அன்சாரி பல்வேறு வழக்குளில் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருந்தவர். இவரது கூட்டாளிகள் வாரணாசியில் பெரிய அளவிலான துப்பாக்கிச் சூட்டையும் நடத்தியுள்ளனர். மேலும், பாஜக பிரமுகர் கிருஷ்ணானந்த் ராய் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இதற்கிடையில் உத்தரப் பிரதேசத்தில் 2017ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தது.
அப்போது, என்கவுன்ட்டர் நடவடிக்கையில் முக்தார் அன்சாரி கொல்லப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அவர் மீண்டும் உத்தரப் பிரதேச சிறைக்கு மாற்றப்படுவது அரசியல் ரீதியிலான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.