காமெடி நிகழ்ச்சியின் போது இந்து மதக் கடவுள்களை இழிவுப்படுத்தியதாகக் கூறி கடந்த ஒரு மாத காலமாக ஸ்டாண்ட்-அப் காமெடியன் (தனிக்குரல் நகைச்சுவையாளர்) முனாவர் ஃபாரூகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு இடைக்கால பிணை வழங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி முனாவர் ஃபாரூகி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே, முறையான நடைமுறைகள் பின்பற்றவில்லை எனக் கூறி மத்தியப் பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
குற்றச் சட்ட பிரிவு 41இன்படி மாஜிஸ்திரேட் உத்தரவு இல்லாமல் குறிப்பிட்ட நபரை கைது செய்ய முடியாது என ஃபாரூகியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடினார். "குற்றவியல் நடைமுறைகள் பிரிவு 41 பின்பற்றப்படவில்லை எனக் கூறுகிறீர்களா? என நீதிபதி ரோஹின்டன் நாரிமன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஃபாரூகி தரப்பு வழக்கறிஞர் கவுரவ் கிர்பால், "ஆமாம், பின்பற்றப்படவில்லை. எனது, கட்சிக்காரர் துன்புறுத்தப்பட்டார். அதுமட்டுமில்லாமல், உத்தரப் பிரதேசத்தில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றார். இதுவரை, ஃபாரூகிக்கு மூன்று முறை பிணை மறுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 28ஆம் தேதி, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அவருக்கு பிணை மறுத்து உத்தரவிட்டது.
கடந்த ஜனவரி 1ஆம் தேதி, இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இந்து மதக் கடவுள்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குறித்து அநாகரீகமான நகைச்சுவைகளை தெரிவித்ததாக ஃபாரூகி உள்பட ஐந்து பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், அன்று, அவர் எந்த விதமான நகைச்சுவலைகளையும் தெரிவிக்கவில்லை எனப் ஃபாரூகி தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.