பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். இவ்வழக்கின் விசாரணை பல்வேறு கோணங்களில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இது தொடர்பாக, சுஷாந்த காதலி ரியா சக்கரவர்த்தி அளித்துள்ள புகாரில், சுஷாந்த் சிங்கின் சகோதரிகள் இருவர், தருண் குமார் என்ற மருத்துவருடன் இணைந்து, தடைசெய்யப்பட்ட மருந்துகளை சுஷாந்துக்கு கொடுத்து கொலை செய்துவிட்டனர் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பான பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்துசெய்ய வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றத்தில் சுஷாந்த் சிங்கின் சகோதரி பிரியங்கா சிங் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இவ்வழக்குத் தொடர்பாகப் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கைய ரத்துசெய்ய முடியாது. முதல் தகவல் அறிக்கையிலிருந்து சுஷாந்தின் சகோதரிகளில் ஒருவரான மீரூட் சிங் பெயரை மட்டும் நீக்குவதற்கு அனுமதி அளித்துத் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் பிரியங்கா சிங் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில் இன்று, இவ்வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர், "ஊடக அறிக்கைகளின் அடிப்படையில்தான் வழக்குப் பதியப்பட்டுள்ளது. அதனை ஆதாரமாக வைத்த உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது அதிகார மீறல்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாங்கள் இந்த மனுவை மேலும் நீடிக்க விரும்பவில்லை. இவ்விவகாரத்தில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்துசெய்யக் கோர முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஓட்டுநர் உரிமம், வாகன சான்றுகளுக்கான வேலிடிட்டியை நீட்டித்து அரசு உத்தரவு