டெல்லி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, தமிழக அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை பதவி நீக்கம் செய்ய கோரிய மனு ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் இன்று (ஜன. 05) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க தடை இல்லை என்கின்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதே என உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இசைந்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர தடையில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்திருந்தது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, குற்றவியல் வழக்கு நிலுவையில் உள்ள நபர் அமைச்சராகத் தொடர தடையில்லை. ஆனால் குற்றம் நிரூபிக்கப்பட்டால், பதவி நீக்கம் செய்யப்படுவார் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
மேலும், நீதிமன்றக் காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வது குறித்து முடிவெடுக்குமாறு முதலமைச்சருக்கு அறிவுறுத்தலாம் எனக் கூறி இருந்தனர். அமைச்சர் தொடர்பாக ஆளுநர், முதலமைச்சரின் பரிந்துரையோடு செயல்படலாம், தன்னிச்சையாக செயல்பட முடியாது எனக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, உஜ்ஜல் புய்யான் அடங்கிய அமர்வு, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஒத்த தீர்ப்பையே வழங்கியுள்ளது. அதில், உயர் நீதிமன்றத்தின் ஆராய்ந்து எடுக்கப்பட்ட தீர்ப்புடன் நாங்கள் உடன்படுகிறோம். சட்டப்பிரிவு 136இன்படி எந்த தலையீடும் கோரப்படவில்லை எனத் தெரிவித்தது. மேலும், முதலமைச்சரின் பரிந்துரை இன்றி ஆளுநர் ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முடியாது எனவும் தெரிவித்தது.
இதையும் படிங்க: பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!