டெல்லி: தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்தனர். இதனையடுத்து கடந்த ஜுன் மாதம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்தனர்.
இதனையடுத்து, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சையை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், "உடல் நிலை சரியில்லாததைக் காரணம் காட்டி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 19ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம் திரிவேதி அடங்கிய அமர்வு கடந்த அக்டோபர் 30ஆம் தேதி விசாரணை செய்து வழக்கு விசாரணையை நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையிலிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை மோசமடைந்ததன் காரணமாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இந்த நிலையில், இன்று (நவ. 20) மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம் திரிவேதி அடங்கிய அமர்வு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் முகுல் ரோகத்கி ஆஜராகி செந்தில் பாலாஜி உடல் நிலை குறைவின் காரணமாக ஜாமீன் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அமலாக்கத்துறை தரப்பில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழங்கினால் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி சாட்சியங்களைக் கலைக்க வாய்ப்புள்ளது. மேலும் செந்தில் பாலாஜியின் உடல் நிலை ஆரம்பத்திலிருந்தது போல் தான் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தற்போதைய மருத்துவ பரிசோதனை செய்த தகவல்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 28ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: "3 வருடமாக தமிழக ஆளுநர் என்ன செய்து கொண்டு இருந்தார்?" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!