டெல்லி: நாடாளுமன்றத்தில் தீர்ப்பாயங்களை ரத்துசெய்து இயற்றப்பட்ட சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, இன்று தலைமை நீதிபதி என்.வி. ரமணா, டி.ஒய். சந்திரசூட், எல். நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் வழக்கறிஞர் துஷ்கர் மேத்தா இவ்வழக்கை வியாழக்கிழமை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரினார். இருப்பினும், வழக்கை விசாரித்த நீதிபதிகள் துஷ்கர் மேத்தாவை கேள்விகளால் துழைத்தெடுத்தனர்.
"எத்தனை பேரை தீர்ப்பாயங்களில் நியமித்திருக்கிறீர்கள். மற்ற அமர்வுகளில் வழக்குகள் குவியும் நிலையில், தீர்ப்பாய நியமன விவகாரத்தை விசாரிக்க சிறப்பு அமர்வை அமைத்திருக்கிறோம். தீர்ப்பாயங்களில் பணியிட நியமனங்களுக்கான பரிந்துரைகளை நீதிமன்றம் வழங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. இருப்பினும், ஏன் இன்னும் நியமனங்கள் செய்யப்படவில்லை" என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
நீதிபதி சந்திரசூட், "நியமனம் செய்வதற்கான பரிந்துரைப் பட்டியலை நாங்கள் கொடுத்துள்ளோம். அதை நீங்கள் (மத்திய அரசு) நிராகரித்திருக்கிறீர்கள். அதற்குத் தெளிவான விளக்கமும் நீங்கள் (மத்திய அரசு) கொடுக்கவில்லை. இது எங்களின் ஆற்றலை வீணாக்குகிறது" எனக் காட்டமாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து தலைமை நீதிபதி என்.வி. ரமணா, அவர்கள் (மத்திய அரசு) உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பதிலளிக்கக் கூடாது என்பதில் குறியாக உள்ளதாகக் கூறிவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: மேகதாது - தமிழ்நாடு அரசு புதிய மனு