டெல்லி: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தலைமைச் செயலாளரின் வீட்டிற்கு வரவழைக்கப்பட்ட பெண், அந்தமான் நிகோபார் மாநிலத்தின் தலைமை செயலாளர் ஜிதேந்தர் நரைன் உள்ளிட்டோர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதுதொடர்பாக, சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தி இருந்த நிலையில், அக்டோபர் 1ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் பேரில், நவம்பர் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். ஜிதேந்தர் நரைன் கைது செய்யப்பட்ட தருணத்தில், அவர் டெல்லி நிதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்து வந்தார். இதனையடுத்து, அக்டோபர் 17ஆம் தேதி அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கிட்டத்தட்ட 90 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை, தடயவியல் அறிக்கை உள்ளிட்டவைகளின் அடிப்படையில், சிறப்பு விசாரணைக்குழு தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் ஜிதேந்தர் நரைன், தொழிலதிபர் சந்தீப் சிங் என்ற ரிங்கு, சஸ்பெண்ட் செய்யப்பட்ட தொழிலாளர் நலத்துறை ஆணையர் ரிஷிஷ்வர்லால் ரிஷி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றன.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவு 376 ( பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை), 376சி, 376டி, 354 (ஒரு பெண் மீதான தாக்குதல் அல்லது பாலியல் வன்கொடுமை குற்றம்), 328 (காயப்படுத்துதல்) மற்றும் 201 (ஆதாரங்கள் காணாமல் போனது) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, அந்தமான் மற்றும் நிகோபார் தீவின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்தர் நரைன் உள்ளிட்டோருக்கு, கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் போர்ட் பிளேர் கிளை, ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு இருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அசானுதீன் அமானுல்லா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த நீதிபதிகள் அமர்வு, ஜிதேந்தர் நரைனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் மனுவை எதிர்த்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக, உயர்நீதிமன்றம், அனைத்து வாதங்களையும் சரிவர மேற்கொண்டிராத நிலையில், தாங்கள் இந்த மனுக்களை விசாரிப்பது, வழக்கின் விசாரணையை பாதிக்கும் விதத்தில் அமையும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.