குஜராத்: குஜராத் மாநிலத்தின் சுரேந்திர நகர் மாவட்டத்திலுள்ள சத்திரியாலா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் கன்ஹையலால் பரையா(50).
அரசுப்பள்ளி ஆசிரியரான இவர், அதே மாவட்டத்தில் உள்ள நினமா கிராமத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த கிராமம் அவருடைய சொந்த கிராமத்திலிருந்து 75 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இதனால் பள்ளிக்கு தினமும் சென்று வர சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஆசிரியருக்கு நிகழ்ந்த தீண்டாமை
இதையடுத்து பள்ளி அருகிலேயே வாடகைக்கு வீடு தேடியுள்ளார், ஆசிரியர் கன்ஹையலால் பரையா. ஆனால், வீட்டின் உரிமையாளர்கள் ஆசிரியர், 'வால்மீகி' என்ற பட்டியலினத்தைச் சார்ந்தவர் என்பதால், வீடு தர மறுத்துள்ளனர். இதனால் தினமும் 150 கிலோ மீட்டர் பயணம் செய்து மாணவர்களுக்குப் பாடம் கற்று கொடுத்து வந்துள்ளார்.
இந்த அவல நிலை குறித்து மாநில சமூக நீதித்துறை மூலம் கல்வித்துறைக்கு ஆசிரியர் புகார் அளித்தார். இதையடுத்து சமூக நீதித்துறை ஆசிரியரை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்யுமாறு கல்வித்துறைக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பியது.
ஆசிரியர் கன்ஹையலால் பரையா கூறும்போது, "எனக்கு நேர்ந்த நிலை குறித்து முதலமைச்சர் புபேந்திர படேலுக்கு தெரிவித்தேன். இது தொடர்பாக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்" என்றார்.
இச்சம்பவம் குறித்து சுரேந்திரநகர் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, தற்போது தான் விடுமுறையில் இருப்பதாகவும், இது குறித்து விசாரிப்பதாகவும் தெரிவித்தார்.
பட்டியலின சமூக ஆர்வலர்கள் கூறும்போது, 'சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவது இங்கு சகஜமானதுதான். இதற்கு ஆசிரியர்களும் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது' என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை: அரசாணை வெளியீடு