உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக, அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிரமாகக் களம் காண்கின்றன.
ஆம் ஆத்மி, சிவசேனா போன்ற கட்சிகளும் சில தொகுதிகளில் தனித்து களம் காண்கின்றன. இந்நிலையில், சிவசேனா தேசிய செய்தித்தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் செய்தியாளரை சந்தித்தார்.
அப்போது அவர், "தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கட்டளைகளையே செயல்படுத்திவருகின்றன. நாங்கள் மாநிலத்தில் 65 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தினோம். ஆனால், எங்களது 15 வேட்பாளர்களின் வேட்புமனுவை உரிய காரணம் இன்றி தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
தேர்தல் ஆணையம் மத்திய அரசின் அடிமை போல் செயல்படுகிறது. சிபிஐ, அமலாக்கத்துறை தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளை குறிவைத்தே ஏவப்படுகிறது.
இந்த அமைப்புகளுக்கு 2024ஆம் ஆண்டுகளுக்குப் பின் தக்கப் பாடம் புகுத்தப்படும். 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 100 இடங்களில் சிவசேனா போட்டியிட திட்டமிட்டுள்ளது. இவற்றில் உத்தரப் பிரதேசத்தில் 15 தொகுதிகள் அடங்கும்" எனப் பேசினார்.
இதையும் படிங்க: உ.பி தேர்தலில் அகிலேஷ் கட்சிக்கே ஆதரவு - சீதாராம் யெச்சூரி