மிர்சாபூர்: உத்தரப்பிரதேச மாநிலம், மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள ஜசோவர் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த சானியா மிர்சா என்ற இளம்பெண், தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அதோடு 149ஆவது ரேங்க்கையும் பெற்று சாதனைப் படைத்துள்ளார். இவர் இந்திய விமானப் படையின் போர் விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சானியா மிர்சாவின் தந்தை ஷாஹித் அலி, ஒரு டிவி மெக்கானிக். சிறுவயது முதலே படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட சானியா மிர்சா, 12ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த என்டிஏ தேர்வில் கலந்து கொண்டார். இந்த நிலையில், என்டிஏ தேர்வில் தேர்ச்சிப்பெற்று போர் விமானி ஆக உள்ளார். உத்தரப்பிரதேசத்தின் முதல் பெண் போர் விமானி மற்றும் இந்தியாவின் முதல் இஸ்லாமியப் பெண் போர் விமானி என்ற பெருமையை சானியா மிர்சா பெற்றுள்ளார்.
இதுகுறித்து சானியா மிர்சா கூறுகையில், "போர் விமானிகளில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதன் காரணமாகவும், நாட்டின் முதல் பெண் போர் விமானி அவனி சதுர்வேதியால் ஈர்க்கப்பட்டும் போர் விமானியாக முடிவு செய்தேன். பள்ளிப்படிப்பை முடித்த பிறகுதான் போர் விமானி ஆக வேண்டும் என தீர்மானித்தேன். சிபிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே என்டிஏ-வில் வெற்றி பெறுகிறார்கள் என்று பேசப்படுகிறது. ஆனால், நான் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தாலும் என்டிஏ-வில் தேர்ச்சி பெற முடியும் என்பதை சாதித்துக் காட்டியுள்ளேன்" என்றார்.
இதையடுத்து சானியா மிர்சா வரும் 27ஆம் தேதி புனேவில் உள்ள பாதுகாப்பு அகாடமியில் சேரவுள்ளார். சானியா மிர்சாவின் சாதனை குறித்து அவரது பெற்றோர் மற்றும் கிராமத்தினர் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:புதுச்சேரியில் குழந்தைகளை கவர்ந்த சாக்லேட் பூதம்!