புரி: ரக்ஷா பந்தன் திருநாளையொட்டி பூமி தாயே சந்திரனுக்கு ராக்கி கட்டுவதுபோன்ற மணல் சிற்பத்தை வடிவமைத்து அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக். கடற்கரை மணலில் கண் கவர் வர்ணங்களுடன் அவர் வடிவமைத்துள்ள சிற்பம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அது மட்டும் இன்றி இந்த சிற்பத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
நாட்டில் நடக்கும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளையும் தனது மணல் சிற்பக்கலை மூலம் உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பவர் பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயக்.இவர் கடற்கரை மணலில் இன்று ஒரு மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார். சந்திரயான் 3 வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே இருக்கும் நெருக்கத்தை உணர்த்தும் விதமாகவும் அவர் அந்த சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
ரக்ஷா பந்தன் திருநாள் என்பது இந்திய நாட்டின் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான ஒரு பண்டிகை. இந்த பண்டிகையின் போது சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள். நாடித் துடிப்பு இருக்கும் மணிக்கட்டு பகுதியில் கட்டப்படும் அந்த ராக்கி உணர்வுப் பூர்வமாகச் சகோதர சகோதரிகள் இடையேயான உறவை வலுப்படுத்துகிறது.
அப்போது சகோதரர்கள் தங்கள் சகோதரிகளின் வாழ்கையிலும், பாதுகாப்பிலும் துணையாக நிற்போம் என உறுதி கொள்வார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பண்டிகையைப் பூமி தாயும், சந்திரனும் கொண்டாடும் விதமாக சுதர்சன் பட்நாயக் தனது மணல் சிற்பத்தை வடிவமைத்துச் சிறப்பித்துள்ளார்.
பார்ப்போரை மெய் சிலிர்க்க வைக்கும் அந்த மணல் சிற்பம் சந்திர சகோதரன் பூமிக்கு என்றும் துணையாக இருப்பான் என்ற வகையில் இருக்கிறது. அதனுடன் அவர் எழுதி இருக்கும் "சந்த மாமாவுக்கு ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்" என்ற வாழ்த்து செய்தி அனைவரையும் உணர்வுப்பூர்வமாக ஈர்த்துள்ளது.
இவரின் இந்த மணல் சிற்பம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ள நிலையில் உலக அளவில் அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சந்திரனை ஆய்வு செய்யும் நோக்கத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் கடந்த 23ஆம் தேதி சந்திரனில் சாஃப்ட் லேண்டிங் செய்தது.
நிலவின் தென் துருவத்தில் முதன் முதலில் கொடி நாட்டியுள்ள இந்தியா, உலக அளவில் உற்று நோக்கும் நிலையை எட்டியது. இந்தியர்கள் அனைவரும் தாங்கள் பெற்ற வெற்றியாகவே சந்திரயான் 3 வெற்றியைக் கொண்டாடினார்கள்.
அந்த கொண்டாட்டத்தையும், மகிழ்ச்சியையும் மேலும் இரட்டிப்பாக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயகின் மணல் சிற்பம் வெறும் ஓவியம் அல்ல ஒட்டுமொத்த இந்திய மக்களின் மகிழ்ச்சியின் வெளிப்பாடு.
இதையும் படிங்க: லெக்ராஞ்சியன் புள்ளியை இஸ்ரோ தேர்வு செய்தது ஏன்?- அதித்யா எல்-1 என்றால் என்ன? - விளக்குகிறார் விஞ்ஞானி எபிநேசர் செல்லச்சாமி!