சீரடி: மகாராஷ்டிரா மாநிலம், சீரடியில் உள்ள சாய்பாபா கோயில் உலக பிரசித்திபெற்றது. பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சீரடி வந்து சாய்பாபாவை தரிசித்துச் செல்கின்றனர்.
சாய்பாபா கோயிலில் பல்வேறு வேண்டுதல் கோரிக்கைகளை வைக்கும் பக்தர்கள் அது நிறைவேறியதும் தங்கமாகவும், வெள்ளியாகவும், பணமாகவும் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர். சிலர் தங்கத்தால் ஆன தலைப்பாகையினையும் ஒருசிலர் வெள்ளியால் செய்யப்பட்டதையும் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
அந்தவகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் வழங்கிய காணிக்கை பேசு பொருளாக மாறியுள்ளது. கனாரி சுபாரி பட்டேல் என்பவர், வைரக் கற்கள் பதித்த தங்கத்தால் செய்யப்பட்ட கிரீடத்தை காணிக்கையாக வழங்கி உள்ளார். 368 கிராம் எடை கொண்ட அந்த கிரீடம் ஏறத்தாழ 28 லட்ச ரூபாய் மதிப்புடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கலை வேலைப்பாடுடன் தங்க கிரீடத்தில் வைரக் கற்கள் பதிக்கப்பட்டு காண்போரின் கண்களை கொள்ளை கொள்ளும் அளவில் கிரீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் வசித்து வரும் தொழிலதிபர் கனாரி சுபாரி பட்டேல், கோயில் நிர்வாகத்தினரிடம் வைரக் கற்கள் பதித்த கிரீடத்தை வழங்கினார்.
இதையும் படிங்க: Video: பூட்டிய அறையில் பெண்ணிடம் மல்லுக்கட்டிய போலீசார்!