நியூயார்க்: ஆப்கனில் நடைபெறும் தலிபான் ஆட்சிக்கு அந்நாட்டு மக்கள் உள்பட பல்வேறு நாட்டு மக்களும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறாமலேயே இருந்து வருகின்றனர். அரசு, தனியார் அலுவலகங்கள் செயல்படவில்லை.
குறிப்பாக, அந்நாட்டை விட்டு வெளியேற விமான நிலையத்தில் மக்கள் குவிந்து வருகின்றனர். இதனிடையே காபூல் விமான நிலையம் முன்னதாக முடக்கப்பட்டது. போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வந்தனர்.
தொடர்ந்து, ஆப்கனில் மீதமுள்ள அமெரிக்கப் படையினர், விமான நிலையத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க வைத்தனர். அதனடிப்படையில் பல்வேறு நாடுகள், ராணுவ விமானங்கள் மூலம் தங்களது நாட்டு மக்களை பத்திரமாக மீட்டு வருகின்றனர்.
சில நாடுகள் ஆப்கன் மக்களுக்கும் அடைக்கலம் அளிக்க முன்வந்துள்ளன. குறிப்பாக, இந்தியா இ-எமர்ஜென்சி விசாவை அறிமுகப்படுத்தி இந்திய, ஆப்கன் மக்களை மீட்க முன்வந்துள்ளது. அதன்படி, முதலில் ராணுவ விமானம் மூலம் காபூலில் உள்ள இந்தியத் தூதரக தூதர்களும் அலுவலர்களும் மீட்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பல்வேறு நாடுகளில் உள்ள ஆப்கன் மக்கள், தங்களது நாட்டு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டவும், அடைக்கலம் அளிக்கவும் உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல, தலைநகர் டெல்லியில் வாழும் ஆப்கன் அகதிகளும் உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தியர்களை மீட்பதே முதன்மை நோக்கம்
இதனிடையே, நான்கு நாள் பயணமாக நியூயார்க் சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இன்று (ஆகஸ்ட்.19) சர்வதேச அமைதி, பாதுகாப்பு, அச்சுறுத்தல், தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்த விவாதக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், "ஆப்கனில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து, மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் அங்கு நடக்கும் விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனமாக இருக்கிறோம். இந்தியர்களை மீட்பதே நாட்டின் முதன்மை நோக்கம்" எனத் தெரிவித்தார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா-இந்தியா இடையேயான ஒப்பந்தங்களில் கையெழுத்திட நான்கு நாள் பயணமாக ஆகஸ்ட் 16ஆம் தேதி நியூயார்க் சென்றார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (United Nations Security Council) தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றபின், அவர் செல்லும் முதல் பயணம் இது.
இந்தத் தலைமைப் பொறுப்பை இந்தியா இரண்டு ஆண்டுகளுக்கு வகிக்கிறது. இந்த ஆண்டுகளில், கடல்சார் பாதுகாப்பு, அமைதி, பயங்கரவாத எதிர்ப்பு குறித்த முக்கிய நிகழ்வுகளில் இந்தியா தலைமை வகிக்கும்.
இதையும் படிங்க: உலகம் எங்கள் நாட்டை கைவிடக் கூடாது - ஆப்கன் அகதிகள்