புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்த பேரறிவாளவன் உச்ச நீதிமன்றத்தால் இன்று (மே18) விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையில், இந்தத் தினம், “துக்க தினம்” எனக் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் புதன்கிழமை (மே18) பேசுகையில், “ராஜிவ் காந்தி கொலை தண்டனை கைதிகள் விவகாரத்தில் பிரதமர் மோடி பதில் சொல்லியே ஆக வேண்டும்.
பயங்கரவாதம் பற்றிய உங்கள் இரட்டைப் பேச்சு இது? முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொன்ற கொலையாளிகள் விடுதலைக்கு உடந்தையாக இருக்கப் போகிறீர்களா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், கொலையாளிகளை விடுவிக்க நீங்கள் இயல்பாக அனுமதிக்கிறீர்கள்.
இதுதான் உங்கள் தேசியவாதமா?. இந்தச் செயல் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களின் மனதில் ஆழமாக வேரூன்றியிருக்கும் தப்பெண்ணத்தை இது அம்பலப்படுத்துகிறது. மேலும், இது கோடிக்கணக்கான இந்தியர்களை காயப்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
31 ஆண்டுகால சிறை வாசத்துக்கு பின்னர் பேரறிவாளன் இன்று விடுவிக்கப்பட்டார். அவரது விடுதலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சியான அதிமுக, தமிழ்நாடு மாநில பாஜக மற்றும் வைகோ, சீமான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: பேரறிவாளன் கைது முதல் விடுதலை வரை... 31 ஆண்டுகள் நடந்தது என்ன? - விரிவான தகவல்