காங்கிரசின் பல தலைவர்கள் வரிசைக்கட்டி பாஜகவில் இணைவது வாடிக்கையாகி வருகிறது. அண்மையில் உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்த நிலையில், ராஜஸ்தான் காங்கிரசிலும் சலசலப்புகள் தொடர்ந்து நிலவி வருகின்றன.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாத் தரப்புடன் இளம் தலைவரான சச்சின் பைலட் மோதல் போக்கைத் தொடர்ந்து வரும் நிலையில், சச்சின் பைலட் பாஜகவில் இணையப்போவதாக பலரும் பேசிவருகின்றனர்.
காங்கிரசிலிருந்து விலகி தற்போது பாஜக எம்பியாகவுள்ள ரீட்டா பகுகுனா ஜோஷி, பாஜகவில் சேர்வது குறித்து சச்சின் தன்னிடம் பேசியதாக பரபரப்புக் கருத்தை வெளியிட்டார். இதற்கு கிண்டலடிக்கும் தொனியில் சச்சின் பைலட் பதிலடி தந்துள்ளார்.
"ரீட்டா பகுகுனா ஜோஷி சச்சின் டென்டுல்கரிடம் பேசியிருப்பார், அந்த சச்சின் நான் இல்லை" என பதில் தந்துள்ளார். மேலும், காங்கிரசில் 25 ஆண்டுகள் இருந்து பாஜகவுக்கு சென்ற ஒருவர், இதுபோன்று பேசுவது முறையல்ல எனவும் சச்சின் பைலட் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவிலிருந்து விலகி 'தாய் கட்சி' திருணமூல் திரும்பிய முகுல் ராய்