பத்தனம்திட்டா (கேரளம்) : கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் அமைந்துளன்ள சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில் திருநடை இன்று (நவ.15) இன்று மாலை திறக்கப்படுகிறது. தொடர் மழை காரணமாக பம்பை நதியில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உடனடி பதிவு முறையும் நிறுத்தப்பட்டுள்ளது.
41 நாள்கள் நடைபெறும் மண்டல மாவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் திருக்கோயில் 41 நாள்கள் திறந்து இருக்கும். அதன்பின்னர் கோயில் நடை டிசம்பர் 26ஆம் தேதி சாத்தப்படும்.
பின்னர் மீண்டும் டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்படும். தொடர்ந்து ஜனவரி 20ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். எனினும் தொடர் கனமழை வெள்ளப்பெருக்கு காரணமான பம்பையில் நீர்வரத்து அதிகம் இருப்பதால் அங்கு நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், “சபரிமலை யாத்ரீகர்கள் கட்டாயம் கோவிட் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். பக்தர்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் யாத்திரையின்போது கண்டிப்பாக 72 மணி நேரத்துக்கு முன்னதாக எடுக்கப்பட்ட ஆர்டி- பிசிஆர் மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.
மண்டல மாவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆகையால் பக்தர்கள் ஆதார் உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை வைத்திருப்பது அவசியம்.
பம்பா மற்றும் சந்நிதானம் அருகே ஆக்ஸிஜன் வசதி கொண்ட மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் யாத்திரையின்போது தங்களுக்கு இதய வலி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட ஏதேனும் பிரச்சினையை உணர்ந்தால் உடனே அருகில் உள்ள சுகாதார மையத்தை தொடர்புக்கொள்ள வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க : பக்தர்களின் வீட்டிற்கே தேடிவரும் சபரிமலை பிரசாதம்: அஞ்சல் துறை அடடே!