பத்தனம்திட்டா: சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. இந்நிலையில், பக்தர்கள் ஆரோக்கியமான யாத்திரையை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சபரிமலையில் தினசரி 25,000 பக்தர்கள் தரிசனத்துக்கு கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. கோவிட் நடைமுறைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனப் பக்தர்களுக்கு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில், பக்தர்களுக்கு சில வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
கோயிலுக்குள் சென்று சாமி ஐயப்பனைத் தரிசிக்க முன்கூட்டியே ஆன்லைனில் பதிவுசெய்திருக்க வேண்டும்.
பக்தர்களுக்கு சில வழிமுறைகள்
- பக்தர்கள் கரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தியதற்கான சான்றிதழையோ, கரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழையோ கண்டிப்பாகக் கொண்டுவர வேண்டும்.
- கோவிட் அறிகுறிகள் உள்ளவர்கள் யாத்திரையைத் தவிர்க்க வேண்டும்.
- முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
- கூட்டம் அதிகமாக இருக்கும் உணவகங்கள், கடைகள், வரிசைக்கு வராமல் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
- கைகளை அடிக்கடி கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு சுத்தம்செய்ய வேண்டும்.
- கரோனா அறிகுறிகள் தென்பட்டால் நிலக்கல், பம்பா, சன்னிதானத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவும்.
- நிலக்கல், பம்பா, சன்னிதானம் மருத்துவமனைகளில் தலா இரண்டு மருத்துவர்கள், செவிலியர், உதவியாளர்கள், மருந்தாளுநர், ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியில் இருப்பார்கள்.
- பம்பாவில் வென்டிலேட்டர் வசதி உள்ளது. அவசரநிலைகளைச் சமாளிக்க பம்பா, சன்னிதானத்தில் ஆக்சிஜன் சப்ளை செய்யப்படுகின்றது.
- யாத்ரீகர்களுக்கு பம்பாவிலிருந்து பாட்டில் குடிநீர் வழங்கப்படும். இரண்டு இடங்களில் தண்ணீர் நிரப்ப வசதிகள் செய்யப்படும். 40 இடங்களில் கை கழுவ சானிடைசர் வசதி செய்யப்பட்டுள்ளது.